Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Monday, July 19, 2010

நியாயமான ஆருடங்கள் என்றைக்குமே மக்கள் மனதை பாதிக்காது

2008 ம் அரசியல் பெரும் புயல் கடந்து சென்றதை யாராலும் மறக்கமுடியாது. அதனை ஏற்ப்படுத்திய மக்களை எந்த ஒரு அரசியல் ஆருடங்களும் பாதிக்காமல் இருக்க மக்கள் தயாரான நிலையில் இருக்கிறார்கள் என்பதனை ஆருடங்களை பரப்பும் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிக்கை மேல் அறிக்கை விடுவதனையும் ஒரு சில தலைவர்கள் தனது அரசியல் கொள்கையாகவே கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சிலர் வாய்ச்சொல் வீரராக முயல்வதனையும் மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப தலைவர்கள் தங்களை மாற்ற இயலவில்லை என்றால், மக்கள் கட்சியை புறக்கணிக்கும் நிலை வந்துவிடும் அபாயத்தை அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதனை கட்சி மேல்மட்ட தலைவர்களும் அறிவார்கள்.

மக்கள் தேர்வுக்கு என்றைக்கும் தலைவணங்கும் தலைவர்களை நான் பார்த்ததுண்டு ஆனால் அந்த ஒரு காரணத்தை வைத்து கொண்டு அறிக்கை வழி எண்ணிக்கையை காட்டி கட்சியை பயமுறுத்தும் அரசியல் கோமாளிகளை என்ன என்று சொல்வது? என்றைக்கு, என் சேவை தான் சிறந்தது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் தலைவர்கள் மாறுகிறார்களோ, அத்தலைவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் அரசியலில் கரை சேர முடியாது என்பதனை பலர் புரிந்து கொள்ளவேண்டும்.

அரசியலில் மாற்றத்தை விரும்பும் நாம், அரசியலில் பிரதிநிதி மாற்றத்தை விரும்பாதது ஏன்? ஒரு நல்ல அரசியல் கொள்கைவாதி, அரசியலில் வெற்றியடைய செயல்பட வேண்டும். அதனை செய்யாமல், அரசியலையே வென்று விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தால், அந்த அரசியல்வாதி நிலை தடுமாறிவிட்டார் என்றுதானே சொல்ல வேண்டும்.

மக்கள் மனதை விட்டு விலகும் அரசியல் பிரதிநிதி என்றைக்கும் அரசியலில் நிலைக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை ஒரு சிலர் மறுப்பதும் உண்டு.

பத்திரிக்கை அறிக்கை மூலம் அரசியல் சேவை செய்த காலம் மாறி இன்று செயலில் அரசியல் விவேகத்தை காட்டும் தலைவனைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

ஆருடங்களை தலைவர்களே பரப்புகிறார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள் என்பதனை ஒரு சில தலைவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்களும் உண்டு. அது கடந்த கால அரசியல் யுக்தி. இந்த கால அரசியலில் அது பலிக்காது. இன்றைய சூழ்நிலைக்கு அரசியல், சமூகவியல், பொருளாதாரம்,கல்வி, மற்றும் பல துறைகளில் திறமையாக மும்மொழிகளிலும் பேசவும், எழுதவும் திறமையுள்ள பிரதிநிதியைதான் மக்கள் விரும்புகின்றனர். ஆகவே மக்களுக்காக அரசியல் சேவை செய்யும் காலம் இது. இனி அரசியலுக்காக மக்களை முன்வைத்து முயல துடிக்கும் தலைவர்களை மக்கள் ஒதுக்க ஒரு பொழுதும் அட்சப்படுவதில்லை என்பதனை நாம் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

கொடுக்கப்பட்ட சேவை காலம் முடிவதற்குள், அடுத்த பொது தேர்தல் வாய்ப்பினை பற்றிய ஆருடங்களுக்கு பதில் சொல்லும் தலைவர்கள் சேவையை எப்படி சிறப்பாக மக்களுக்கு வழங்கமுடியும். ஆருடங்களுக்கு உட்பட்டவந்தான் அரசியல்வாதி. தனிமனித சுயலாபத்திற்கு ஆருடங்களை கண்டு பயம் கொள்வது ஏன்? ஆருடங்களை கண்டு பயம் கொள்ளும் தலைவர்கள் புரிந்தால் நன்று.

இனியும் இந்த அவல நிலை மக்கள் மனதை பாதிக்கும் என்ற எண்ணம் கொண்டுள்ள தலைவர்கள், இது போன்ற ஆருடங்களுக்கு ஆயிரம் கணக்கில் காரணங்களை சொல்லாமல், பலாயிரம் மக்களுக்கு சேவையை முன்வைத்தால் மக்கள் மனதை யாராலும் மாற்ற இயலாது என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த சூழ்நிலையில், நியாயமான ஆருடங்கள் என்றைக்குமே மக்கள் மனதை பாதிக்காது; அதே சமயத்தில் அது எந்த விதத்திலும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காது என்பதனை அரசியல் வட்டார தலைவர்கள் அறிதல் நன்று.

Thursday, December 3, 2009

கற்றலுக்கு தடை வேண்டாம்

அண்மையில் நமது கல்வி அமைச்சு பத்து பாடங்கள் மட்டுமே என்ற கட்டுப்பாடு தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் மறைமுகமாக வளர விடாமல் தடுக்கும் முயற்சி மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நாட்டு கல்வியின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக இருக்க வேண்டிய அரசாங்கம் இந்தியர்களுக்கு தடை கல்லாக உருவம் எடுப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

ஒரு மொழியின் வளர்ச்சியை தடுப்பவன் மனிதனாக இருக்க தகுதியற்றவன். எந்த தமிழனும் தனது மொழியை வளர விடாமல் தடுக்கும் எவனுக்கும் அடிப்பணிய மாட்டார்கள் என்பதனை இந்த அரசாங்கம் மீண்டும் மறந்து விட்டது. தமிழை தாழ்த்த நினைப்பவர்கள் கூடிய விரைவில் மண்ணை கவ்வும் நேரம் நெருங்கி விட்டது. தமிழ் மொழியை தொரடர்ந்து கற்பதற்கு தடை விதிப்பதற்கு இவர்கள் யார்?

ஆரம்ப கட்டத்தில் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சியில் இந்நாட்டு இந்திய சமுதாயம் பல இன்னல்களை அனுபவித்தது. "ஐந்தாம் படிவ பரிட்சையில்" பத்து பாடங்கள் மட்டுமே என்பது திடீர்ரென்று கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல உணர்வுள்ள தமிழர்களின் குரல் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நாட்டில் தீவீர தமிழ் ஆர்வாளர்கள் பலர், இந்த அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து பல போரட்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

மக்களின் உணர்வை மதித்து தேசிய முன்னணி அரசாங்கம் உடனடியாக கல்வி அமைச்சின் முடிவை மாற்றி அமைக்க வழி செய்ய வேண்டும். இல்லையேல் இதன் விளைவுகள் கடந்த போராட்டத்தை விட பெரிய அளவில் உருவெடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதனை மனதில் கொள்ள வேண்டும். தமிழ் பாடத்திற்கு தடை தேசிய முன்னணியின் அரசியல் நோக்கமாகும், இலக்கியம் மிகுந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது தமிழ் இலக்கியம் மீது தேசிய முன்னணி வெறுப்பை தெரிவிப்பதனை இதன் வழி மிக தெளிவாக உணர முடிகிறது.

தமிழ் பாடம் வழி பலன்பெறும் அல்லது அத்தமிழ் இல்லாமல் அவதிப்படும் மாணவர்களுக்கே புரியும் இத்தமிழின் அருமை. அதனை கல்வி அமைச்சு நன்கு உணர வேண்டும். தமிழ் மற்றும் அதன் இலக்கியத்தில் தொடர்பில்லாதவர்கள் அதனை மாணவர்கள் எடுக்காமல் தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. தாய் மொழி பாடத்தை தவிர பிற மொழி பாடத்தில் தடை விதித்தால் என்ன பாதிப்பு வருமோ அதே பாதிப்பு இந்திய மாணவர்கள் எதிர்நோக்க கூடும்.

கூடுதல் பாடங்களை மாணவர்கள் எடுப்பது தவறா? பாவ செயலா? உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்தில், கற்றலுக்கு தடை விதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லையா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் திறமையும் இருக்கும் மாணவர்கள் கற்கட்டும், அதனை தடுக்கக் கூடாது. அதும் மட்டும் அல்ல கூடுதல் பாடத்தை எடுக்கும் மாணவர்களுக்கு எந்த ஒரு கெடும் வந்துவிடாது.

இந்நாட்டு அரசாங்கம் தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியத்தின் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதனை மட்டும் நினைவில் கொண்டு, கற்றலுக்கு ஆணை போடாமல், இந்திய மாணவர்கள் முறையாக தமிழ் மொழியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வகை செய்ய வேண்டும்.

நன்றி.

இனம் வாழ மொழி காப்போம், இலக்கியம் காக்க கைகோப்போம்

ஓம்

வாழ்க தமிழ் வளர்க இலக்கியம்

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

வணக்கம்,

தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு இலக்கியம் மிகவும் இன்றியமையாதது. முகவரி இல்லாமல் ஒருவனால் சமூகத்தில் எவ்வாறு வாழமுடியாதோ அத்தகைய முக்கியம் வாய்ந்தது இலக்கியம்.

ஆனால் அந்த இலக்கியம் எவ்வகையில் சமூகத்தின் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்ரது என்பதைப் பொறுத்தே அச்சமூகத்தின் முன்னேற்றத்தில் அதன் பங்கு நிர்ணயிக்கப்படும்.

வளரும் தலைமுறையின் தேவைகளைப் பிரதிபலிப்பதாக இலக்கியம் அமையவேண்டும்.நமது சமூகத்தின் கலாச்சாரங்கள் சுமையாக ஏற்றப்படாமல், சுகமாக ஏற்றப்படவேண்டும். மாற்றங்களை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு அதைப் பக்குவமாக இலக்கியத்துடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.

தர்காலத்தில் நமது சமூகம் உலகம் முழுவதும் பரந்து வியாபித்திருக்கின்றது. தாய்நாட்டின் தமிச்சமூகத்திர்கும், புலம்பெயர் நாட்டின் தமிழ்ச்சமூகத்திற்கும் இலக்கியம், மொழி தான் பாலமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது, இனியும் இருக்கும்.

இதன் தொடர்ச்சியான வளர்ச்சி புலம்பெயர் மக்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் நமது கலாச்சாரத்தை, இலக்கியத்தை எடுத்துச் செல்வதன் மூலமே ஆரோக்கியமானதாக அமையும் என்பது என்னுடைய கருத்து.


"இனம் வாழ மொழி காப்போம், இலக்கியம் காக்க கைகோப்போம்”

“தமிழ் இலக்கியம் வளர கையொப்பமிட்டு கைகோப்போம்”

நன்றி.

இப்படிக்கு
வ. சிவகுமார்